மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகாவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு செல்வது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான இருதரப்பு பிரச்சினை அல்ல; கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச கோரிக்கை மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அந்த விவகாரத்தை இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினையாக தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் அணை கட்டப்படக் கூடாது என்பதற்குப் பதிலாக, அணையின் கொள்ளளவு மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் நடைமுறைகள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார்.
மேலும், மேகதாது போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்றும், உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை அரசு ஏற்காத நிலையில், கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு செல்வது தமிழகத்தின் உரிமை நிலைப்பாட்டை பாதிக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
