மிழக அரசியல் களத்தில் இன்று மேலும் ஒரு பரபரப்பான நிகழ்வை எதிர்கொண்டுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘We The Leader’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இன்று அறிவித்த இதே நாளில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைக்கும் வகையில் மற்றொரு மெகா அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ’மக்கள் மேடை / மக்கள் இயக்கம்’( (Citizens’ Platform / People’s Movement) என்கிற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, அதன் நோக்கங்கள் குறித்த ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்ணாமலையின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியான அதே சில மணி நேர இடைவெளியில், லதா ரஜினிகாந்தும் தனது புதிய முழக்கத்தை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வுகள் ஒளிந்திருக்கின்றனவா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழக மக்களுக்கு அழைப்பு

லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்த இயக்கம் முற்றிலும் மக்களுக்கான ஒரு தளமாகச் செயல்படும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். “மக்களோடு மக்கள்… மக்களோடு மக்கள் இயக்கம், ‘மக்கள் மேடை’. எங்களோடு சேர்ந்து ‘சிட்டிசன்ஸ் பிளாட்பார்ம்’ அப்படின்ற எங்களோட ‘பாடி ஆஃப் ஒர்க்’ கோட சேர்ந்து, இந்த மாநிலத்துக்காக வேலை செய்ய நினைக்கிற அத்தனை பேரும் ஒன்றாக சேரலாம்” என்று அவர் தனது உரையைத் தொடங்குகிறார். மேலும், “ஒன்றாக சேர்ந்து தொடர்பு கொண்டு, ஒரு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாக்கி, இந்த ஸ்டேட்டுக்கு பல நன்மைகளை செய்ய உங்களோடு… ஒன்றாக சேருவோம், ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வோம்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ‘மக்கள் மேடை’ அமைப்பில் யாரெல்லாம் இணையலாம் என்பது குறித்துப் பேசி உள்ள லதா ரஜினிகாந்த், “ஒரு சாமானிய மக்கள் யார் யாரா இருந்தாலும், ‘ரிசோர்ஸ்’ அப்படின்னு ஒன்னு இருக்கு, உங்க ‘ஐடியாஸ்’ இருக்கு, உங்களுக்கு ‘கான்ட்ரிபியூட்’ பண்ணனும்னு, நம்ம வேலை செய்யணும்னு நினைக்கிற ‘மனம்’ இருக்கு… இப்படி இருக்கிற எல்லாருமே இந்த நாட்டுக்காக, தமிழ்நாட்டுக்காக, நாங்க ஒன்னா சேர்றோம், எங்களோட கான்ட்ரிபியூஷன் நாங்க செய்யுறோம் அப்படின்னு நினைக்கிற எல்லாருமே எங்களை தொடர்பு கொள்ளலாம்” என்று மிகவும் விரிவான ஒரு தளத்தை லதா ரஜினிகாந்த் முன்வைக்கிறார்.

இப்படியொரு சமூகப் பங்களிப்பைத் தாண்டி, இந்த இயக்கத்தின் மூலம் அடிமட்ட அளவில் புதிய தலைவர்களை உருவாக்கப் போவதாகவும் அவர் அந்த வீடியோவில் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ” சீனியர் சிட்டிசன்ஸ், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், போஸ்ட்மேன்… யாரா இருந்தாலும், யார் வேணாலும் இந்த தமிழ்நாட்டுக்காக, அந்தந்த தொகுதிக்காகவும் வேலை செய்யலாம்.இந்த மாநிலத்திற்காக உழைக்கக்கூடிய உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மத்தியில் இருக்கும் ஆற்றலையும், புதிய சிந்தனைகளையும் ஒருங்கிணைத்துத் தமிழ்நாட்டிற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுக்கப் போவதாக அவர் கூறும் இந்த வார்த்தைகள், வெறும் சமூக சேவைக்கானது மட்டும்தானா அல்லது எதிர்கால அரசியல் அதிர்வுகளுக்கான அச்சாரமா என்கிற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் விவாத் எழுந்துள்ளது.

அண்ணாமலை – ரஜினி நெருக்கம்

இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம், அண்ணாமலைக்கும் ரஜினிகாந்தின் குடும்பத்திற்கும் இடையே நிலவி வரும் அணுக்கமான அரசியல் நட்புதான். அண்ணாமலை இன்று தனது புதிய கட்சியைத் தொடங்கும் வேளையில், தான் முன்பு பாஜகவில் இணைவதற்கு முன்பாகவே, தான் ஆரம்பிக்கவிருந்த புதிய அரசியல் கட்சியில் இணையுமாறு நடிகர் ரஜினிகாந்த் தமக்கு நேரில் அழைப்பு விடுத்திருந்தார் என்ற ஒரு ரகசியத்தை அண்ணாமலை இன்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் தனது உடல்நலக் குறைவு காரணமாகப் புதிய கட்சியைத் தொடங்காமல் பின்வாங்கினாலும், அண்ணாமலையோடு அவர் பேணிய நெருக்கம் என்பது மிகவும் கவனத்துக்கு உரியதாக உள்ளது. இதனால் அண்ணாமலையின் இன்றைய புதிய கட்சித் தொடக்கம் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்த முன்கூட்டிய விபரங்கள் அனைத்தும் ரஜினிகாந்தின் குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இத்தகையதொரு சூழலில், அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு வெளியான அதே நாளில், லதா ரஜினிகாந்தும் ‘மக்கள் மேடை’ என்கிற அமைப்பின் மூலம் உள்ளூர் தலைவர்களை உருவாக்கப் போவதாக வீடியோ வெளியிடுவது, அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகக் கணைகளை எழுப்பியுள்ளது.

பின்னணியில் பாஜகவா?

இந்த இரண்டு அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளுக்குப் பின்னால்,பாரதிய ஜனதா கட்சியின் மறைமுகமான உத்திகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசியல் வட்டாரத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆளும் பாஜகவுக்குப் பல்வேறு மாநிலங்களில் பல பினாமிகள் உள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் நகர்வும் அதில் ஒன்றாக இருக்கலாம்” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தங்களின் நேரடி அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த முடியாத சூழலில், தங்களுக்கு நெருக்கமான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள முகங்களை முன்நிறுத்தி, தனித்தனி இயக்கங்களாகக் களம் இறக்கி, எதிர்காலத்தில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கப் பாஜக திரைமறைவில் காய்களை நகர்த்துகிறதோ என்ற விவாதம் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சி வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

ஒரே நாளில் அரங்கேறியுள்ள இந்த இரண்டு முக்கியப் பிரகடனங்களும், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் போக்கை மாற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளாக பார்க்கப்படுகின்றன. ஒருபுறம் இளைஞர்களையும், சாமானிய மக்களின் ஆற்றலையும் திரட்டி மாற்று அரசியலை உருவாக்கப் போவதாக அண்ணாமலை முழங்குகிறார்; மறுபுறம் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானிய மக்களின் திறமைகளை ஒருங்கிணைத்து ‘உள்ளூர் தலைவர்களை’ உருவாக்கப் போவதாக லதா ரஜினிகாந்த் அறைகூவல் விடுக்கிறார். இந்த இருவேறான நீரோட்டங்களும் இறுதியில் ஒரே புள்ளியில் இணைந்து தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறதா, அல்லது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்காக வீசப்பட்ட பாஜகவின் பினாமிக் கணைகளா என்பது வரும் நாட்களில் இந்த இயக்கங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் மூலமாகவே முழுமையாக வெளிச்சத்திற்கு வரும்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version