கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் திரட்டி காவல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், கார்த்திக் என்ற நபர் அந்தச் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கார்த்திக்கைக் கைது செய்து விசாரித்ததில், சிறுமியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொடூரக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். சட்டத்தின் முன் குற்றவாளிகளுக்குக் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதலமைச்சர் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாகச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது பெற்றோரையும் குடும்பத்தினரையும் சந்தித்து தங்களது இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது, இந்த 10 வயதுச் சிறுமியின் படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த இந்திய அளவிலும் பெரும் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது மிக மோசமான, கண்டிக்கத்தக்க ஒரு சம்பவமாகும்.
தமிழகத்தில் நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததைப் போன்ற சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுச் சம்பவங்கள் இப்போதும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதற்கு தற்போதைய அரசும், முதலமைச்சருமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கமே இதுபோன்ற குற்றங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. அதன் மீது அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கச் சட்டமன்றத்தில் உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
