விழுப்புரம்- சென்னை சாலையில் அமைந்துள்ள மண்டி மஹல்லா ஜும்மா மசூதியை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான அதிகாரிகள் குழு மசூதிக்கு வந்தது. இதையடுத்து மசூதி வளாகத்தில் சிறிது நேரம் இரு தரப்பினருக்கும் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வக்ஃப் வாரியத்தின் அறிவிப்பு நகலை மசூதி தலைவர் முஜாமில் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டு மசூதியில் ஒட்டவந்ததால் கடும் கூச்சல் குழப்பம் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது மசூதி நிர்வாகிகள், தங்களது மசூதியை வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும், தனிநபரின் சுயலாபத்திற்காகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுதொடர்பாக சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறினர்.
நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த மசூதியை வக்ஃப் வாரியத்துடன் இணைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், சட்டப்பூர்வமான வழியில் தங்களது உரிமையை நிலைநாட்டப் போராடுவோம் என்றும் மசூதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
