இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய ‘தர்மா’ ஓவியம் அகற்றப்பட்டதை, முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இந்திய ராணுவத் தளபதி அலுவலக ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த மகாபாரதத்தை மையமாகக் கொண்ட ‘கரம் க்ஷேத்ரா (Karam Kshetra)’ ஓவியம் அமைதியாக அகற்றப்பட்டுள்ளது.

ரசியல், மத மற்றும் கலாச்சார அடையாளங்களை முன்னிறுத்துவதாக இந்த ஓவியம் மீது எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ராணுவ கட்டளை (Eastern Command) வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் தனது அலுவலகத்தில் உரையாற்றும் போது, முன்பு இருந்த ஓவியத்துக்கு பதிலாக இந்திய ராணுவத்தின் சின்னம் (Army Insignia) பின்னணியில் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஓவியம் 2024 டிசம்பரில் நிறுவப்பட்டது. இதில் பாங்காங் ஏரி கரையில் டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், தேரில் வரும் வீரர், காவி உடை அணிந்த முனிவர் உள்ளிட்ட புராண மற்றும் நவீன ராணுவக் காட்சிகள் ஒன்றாக இடம்பெற்றிருந்தன.

இந்த ஓவியத்தை நிறுவுவதற்காக, பல தசாப்தங்களாக ராணுவத் தளபதி அலுவலகத்தில் இருந்த 1971 இந்தியா–பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் சரணடைந்த வரலாற்று ஓவியம் அகற்றப்பட்டது. இதுவே நாடு முழுவதும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

புதிய ஓவியம் இந்துத்துவ சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாகவும், 1971 போரில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் கிடைத்த வரலாற்று வெற்றியின் நினைவுகளை பின்தள்ளும் முயற்சியாகவும் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ஓவியம் அகற்றப்பட்டதை முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக் வரவேற்று, “ராணுவச் சின்னம் மீண்டும் பின்னணியாக வந்துள்ளது. அடுத்து 1971 சரணடைவு ஓவியமும் அதன் பழைய இடத்திற்கே திரும்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னாள் மேஜர் ஜெனரல் கே. கோரானாவும், “1971-ம் ஆண்டு வெற்றியை நினைவூட்டும் அந்த வரலாற்று ஓவியம் மீண்டும் அதன் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். ராணுவத் தளபதியின் அலுவலகத்தில் மத அடையாளங்களைக் கொண்ட ஓவியங்களுக்கு இடமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் இந்திய ராணுவத்தின் அரசியல் சார்பற்ற தன்மை, பாரம்பரியம் மற்றும் ராணுவ அலுவலகங்களில் மதச் சின்னங்களின் இடம் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version