நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையால் நாடு முழுவதும் கொந்தளித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜென்சி மாணவர்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அமைச்சரின் மகள் நைமிஷா பிரதான் அமெரிக்காவில் உயர்தரக் கல்வி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நைமிஷா பிரதான், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். தற்போது டெல்லியில் அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் கோபத்துடன் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.
“நாட்டின் கல்வி முறையை வடிவமைக்கும் அமைச்சர், தன் மகளை வெளிநாட்டில் உயர்தரப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்திய மாணவர்களுக்கு நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்யத் தவறிவிட்டார்” என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நைமிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கண்டனப் பதிவுகள் வெளியானதால், அவர் தனது கணக்கை நிரந்தரமாக நீக்கி வெளியேறியுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் இதுவரை மூன்று முறை கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைதியாக இல்லை. டெல்லியில் தினசரி தீவிரமடையும் போராட்டத்தில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்தாலும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக மகளை இலக்கு வைத்து சைபர் புல்லிங் செய்வது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பல நெட்டிசன்கள், “அமைச்சரின் கொள்கைகளையும் முடிவுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் அவரது குடும்பத்தினரை, குறிப்பாக பிள்ளைகளைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது நியாயமற்றது. தலைவரை விமர்சியுங்கள், குடும்பத்தை அல்ல” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. மத்திய அரசு சிறு தவறு செய்தாலும் போராட்டம் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதால், சிக்கலை உன்னிப்புடன் கையாள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கல்வித் துறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
