நீட் தேர்வு வினத்தாள் கசிவு மற்றும் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடங்கப்பட்ட போராட்டம் 10 நாட்களை தாண்டி தீவிரமடைந்துள்ளது. கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதால், கொந்தளித்த மாணவர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் பாதுகாப்பு காரணங்களுகாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால், இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றத்திற்கு வர முடியாத சூழலுக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தள்ளப்படுவதாக வழக்கறிஞர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.
அப்போது பேசிய அவர், “மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார். போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
