ஆசியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களை ஒரே மேடையில் சந்திக்கவைக்கும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் (Asian Legends League) சீசன்-2 போட்டி, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை ஜாம்பியாவின் லுசாகா நகரில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யூசுப் பதான் மற்றும் அம்பாட்டி ராயுடு மீண்டும் களமிறங்க உள்ளனர்.
இந்தத் தொடரில் இந்தியன் ராயல்ஸ், இலங்கை லயன்ஸ், வங்கதேச டைகர்ஸ், ஆப்கானிஸ்தான் பதான்ஸ், பாகிஸ்தான் பாந்தர்ஸ், ரெஸ்ட் ஆஃப் ஏஷியன் ஸ்டார்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் இந்தப் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன.
“ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக் சீசன்-2-ல் மீண்டும் விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆசியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒன்றிணையும் இந்தத் தொடர் பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ரசிகர்களை மீண்டும் மகிழ்விப்பதற்காக காத்திருக்கிறேன். இந்தியன் ராயல்ஸ் அணியை ஆதரியுங்கள்,” என்று இந்தியன் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள யூசுப் பதான், தெரிவித்தார்.
அதே அணிக்காக களமிறங்கும் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் அம்பாட்டி ராயுடுவும், “இந்தத் தொடரில் பங்கேற்பது மிகவும் உற்சாகமாக உள்ளது. ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியன் ராயல்ஸ் அணியை உற்சாகப்படுத்துங்கள்,” என்றார்.
இந்த சீசனில் திசாரா பெரேரா, ஷகிப் அல் ஹசன், அஸ்கர் ஆப்கான், முகமது ஹபீஸ், திலகரத்னே தில்ஷான், நமன் ஓஜா, ரிஷி தவான், உபுல் தரங்கா, இசுரு உதானா, தனுஷ்க குணதிலகா, இம்ரான் நசீர், சயீத் அஜ்மல், உமர் அக்மல், யாசிர் ஷா, முகமது இர்ஃபான் உள்ளிட்ட பல முன்னாள் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
ஆசிய கிரிக்கெட்டின் பழைய நட்சத்திரங்களை மீண்டும் ஒரே களத்தில் காணும் வாய்ப்பாக இந்தத் தொடர் அமையவுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
