கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வரும் 33 வயது இளம்பெண் ஒருவரை, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தில் அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர், அந்தப் பெண்ணிடம் நட்பாகப் பழகி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு வருடமாகத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தோணி மரிய ராபினுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்தோணி மரிய ராபின் தனது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் என்பவரை அழைத்துக்கொண்டு, சமாதானம் பேசுவது போல அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயக்கம் தெளிந்த அந்தப் பெண்ணிடம், தாங்கள் செய்த அராஜகத்தை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மிரட்டியுள்ளனர். தங்களைத் திருமணம் செய்ய வற்புறுத்தினாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என்றும், அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், சூலூர் பேருந்து நிலையம் அருகே மறைந்திருந்த கிரிஷ் சாமுவேல் குமாரைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவையில் தொடர்ச்சியாக இத்தகைய குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
