கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் லீக் (BBL) டி20 தொடர், முதன்முறையாக அந்நாட்டைத் தாண்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 12-ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதுகின்றன. வெளிநாட்டு டி20 லீக் போட்டி ஒன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நடைபெறுவது இதுவே முதல்முறை என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த மெகா அறிவிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது.
சென்னையின் பிரத்யேக கிரிக்கெட் ரசிகர் பட்டாளம் மற்றும் மைதானத்தின் சிறப்பான சூழலே இப்போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என பிக் பாஷ் லீக் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு இந்த போட்டி ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக் அமையும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

