கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து, காங்கிரஸ் மீது விமர்சனங்கள் வைப்பதை திமுக தவிர்க்க வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பி.ஆதித்தனாரின் 45-வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர், ஆதித்தனாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அப்போது, திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடர்பான கேள்விக்கு,

கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழ்நாட்டிலும் சரி அகில இந்திய அளவிலும் சரி ஒரே கூட்டணியில் இருந்து ஒன்றாக செயல்பட்டு கொண்டுள்ளோம்.

காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக உறுப்பினர்களும் பணியாற்றி உள்ளார்கள்.

சட்டமன்ற நாடாளுமன்றங்களிலும் உள்ளாட்சிகளிலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து வேறு வேறு நிலைப்பாட்டில் வேறு வேறு கூட்டணிகள் இருந்தாலும் கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து திமுக இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது எனத் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளுக்கிடையே பிரிவு ஏற்படுவதும், பின்னர் வேறு வேறு கூட்டணி ஏற்படுவதும் தமிழ்நாட்டில் அதிசயமான ஒன்றுமல்ல. கடந்த கால தேர்தல்களிலும் இதுபோல் நடந்துள்ளது.

காங்கிரஸின் அமைச்சரவையில் இருந்து கொண்டே பிஜேபி கூட்டணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது திமுக.

உலகத்தில் முதல் முதலாக காங்கிரஸ் திமுக பிரிவு நடந்ததுபோல் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்வது, திமுக திட்டுவதும்  காங்கிரஸ் பதிலுக்கு திட்டுவதும் இன்னும் எவ்வளவு நாளைக்கு  எனக் கேள்வி எழுப்பிய திருநாவுக்கரசர்,

திமுக அவர்கள் வேலையை பார்க்கட்டும் காங்கிரஸ் அவர்கள் வேலையை பார்ப்பார்கள் எனக் கூறினார்.

தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்களால் முடிந்த பணிகளை செயல்படுத்த முற்படுவது தான் நல்லது எனவும்,

ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொள்வது அவசியம் இல்லாதது, நாகரிகம் இலாதது எனத் தெரிவித்தார்.

பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணம் என உதயநிதி விமர்சித்தது குறித்த கேள்விக்கு,

இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெற்றதால் தான் பாஜக ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ் எதிர் கட்சியாக இருக்கிறது.  இதில் புதிதாக கண்டுபிடிப்பதற்கு என்ன இருக்கிறது என உதயநிதிக்கு பதிலடி கொடுத்தவர், வரும்காலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version