இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்
திரைத்துறை பிரபலங்கள், விஐபிக்கள் கோயிலுக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில், இனிவரும் காலங்களில் பின்வரும் வழிமுறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
VIP தரிசனம் :
திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது VIP-க்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் எனது அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.
செல்போனுக்கு தடை :
வருகின்ற 01.09.2026 முதல், அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் மொபைல் போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். இதற்காக, பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க லாக்கர் வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டு, மேற்கண்ட தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
ரீல்ஸ் எடுக்கத் தடை :
திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு VIP-க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
கடுமையான நடவடிக்கை :
இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
