இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறைத்து மதிப்பிடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விக்ஸித் பாரத் சங்கல்ப் சமவேஷா கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதாக நினைத்து ஒவ்வொரு முறையும் நாட்டை குறைத்து மதிப்பிட்டு பேசுவதாக குற்றம்சாட்டினார். பேரழிவு காத்திருப்பதாகவும், சில வாரங்களில் எல்லாம் நொறுங்கிவிடும் என்று ராகுல் காந்தி பேசி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஆனால், ராகுல் கூறுவது போன்று எதுவும் நடைபெறாது என குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு காலாண்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆகியவை வெளிக்காட்டுவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
