மக்களவையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை காலதாமதமின்றி மேற்கொள்ள ஊக்குவிப்பதுடன், தாமதமாக பதிவு செய்யப்படும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதாகும்.

1969-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில், 2023-இல் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, தற்போது மேலும் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டுக்குப் பிறகும், இரண்டு ஆண்டுக்குள்ளும் பதிவு செய்ய வேண்டுமெனில், மாவட்ட ஆட்சியர் (District Magistrate), துணை மாவட்ட ஆட்சியர் (Sub-Divisional Magistrate) அல்லது மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட் ஆகியோரின் உத்தரவு மற்றும் தகவல் சரிபார்ப்பிற்குப் பிறகே பதிவு செய்யப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பதிவு செய்யப்படும் பிறப்பு அல்லது இறப்பு சம்பவங்களுக்கு, முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் (Judicial Magistrate First Class) தகவலை சரிபார்த்து உத்தரவிட்ட பின்னரே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்த மசோதா கடந்த ஜூலை 31-ஆம் தேதி மக்களவையில், எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) மூலம் நிறைவேற்றப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version