தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத அரசாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

விளாத்திகுளம் பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் காலை உணவு கிடைக்காமல் தவித்ததாகவும், பின்னர் அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், மாணவர் எண்ணிக்கை உயரும்போது அதற்கேற்ப உணவு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாதது நிர்வாகத் தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இனி எந்த அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் உரிய கண்காணிப்பு மற்றும் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version