மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக வெள்ளிக்கிழமை (மே 8) தோ்வு செய்தனா். இதையடுத்து அவா் சனிக்கிழமை (மே 9 ) அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகப் பதவியேற்கிறாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் சுவேந்து அதிகாரி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அதனை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதன்பின்னா் ஆளுநர் மாளிகைக்கு சென்று சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரியதை ஆளுநர் ஆா்.என். ரவி  ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராகவும்,  அமைச்சரவை சகாகளும் பதவியேற்கின்றனர். அவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளாா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

சுவேந்து அதிகாரியின் அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version