தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க குதிரைபேரம் நடைபெறும் நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் 16வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைபெறுகிறது. 17-வது சட்டசபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தப்பட்டு மே மாதம் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளையும் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான118 இடங்கள் இல்லாததால், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடனடியாக தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியதன் வாயிலாக தவெகவுக்கு 113 இடங்கள் கிடைத்தது. மீதமுள்ள 5 இடங்களுக்காக தொடர்ந்து தவெக இடதுசாரி கட்சிகள், விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் தவெக. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதனால், தலா 2 எம்எல்ஏக்கள் என 4 எம்.எல்.ஏக்கல் கூடுவதால் இந்த எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. விசிகவும் இன்று தனது ஆதரவைத் தெரிவித்தால், இந்த எண்ணிக்கை 119 ஆக அதிகரிக்கும். அதே நேரம் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால் 2 எண்ணிக்கை குறைந்து தவெகவிடம் 117 என்ற எண்ணிக்கையே இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க சிக்கல் நீடிப்பதால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனிடையே, அமமுகவை சேர்ந்த மன்னார்குடி எம்.எல்.ஏவை காணவில்லை, அவர் விலைபோய் இருக்கலாம். விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக, அமமுக எம்.எல்.ஏ காமராஜ் கடிதம் அளித்துள்ளதாகக் கூறி கவர்னரை சந்தித்து வழங்கியிருந்தார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க குதிரை பேரம் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு அடிப்படையில் அவரது எம்.எல்.ஏவை தவெக பக்கம் இழுப்பதற்கான சான்றுகள் கிடைத்தால், அது தவெகவுக்கு எதிராகத் திரும்பும்.
இதனைக் குறிப்பிட்டு கவர்னர் அர்லேகர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுத முடியும். இதன் காரணமாக தமிழகத்தில் 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடும். 6 மாதத்துக்கு பின்பு தேர்தல் நடத்தவோ அல்லது, ஜனாதிபதி ஆட்சியை அடுத்தடுத்து 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டித்தோ 3 ஆண்டுகள் வரை டெல்லியின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டை வைத்திருப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
பெரும்பான்மையை 10ஆம் தேதிக்குள் நிரூபிக்கப்படாமல் போனால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முடிவை கவர்னர் எடுப்பதற்கான சூழலும் உள்ளது. அதனால், எப்படி போனாலும் 48 மணிநேரத்திற்குள் தவெக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.
