பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசின் பல்வேறு கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, கோவில் நிலங்களை திட்டமிட்டு தாரை வார்ப்பது, மாணவிகள் மீதான காவல்துறையின் லத்தி சார்ஜ் உள்ளிட்ட பிரச்சினைகளில் முதல்வர் விஜய் மௌனம் காக்கும் நிலையை சுட்டிக்காட்டினார்.

“முதல்வர் விஜய், நான் பெண்களுக்கு ‘தாய்மாமா.. அண்ணன்’ என்று சினிமா பாணியில் வீரவசனம் பேசுகிறார். ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறை லத்தி சார்ஜ் செய்த சம்பவத்தில் இதுவரை அவர் எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. இது அவரது பெண் நேசத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

கோவில் நிலங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், அரசு திட்டமிட்டு அந்த நிலங்களை விற்பனை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். “கோவில் நிலங்கள் பூஜை செய்பவர்களுக்கு பயிர் செய்ய மட்டுமே வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின் நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, அரசுக்கு தெரிந்தே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

1947-ல் தென்கரை திருமூல சுவாமி கோவில் நிலத்தை லட்சுமண அய்யர் 80 ஆண்டுகள் அனுபவித்த வழக்கில் நீதிமன்றம் கோவிலுக்கே உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. இதுபோன்ற பல வழக்குகளும் கோவிலுக்கு ஆதரவாக உள்ளன. இருந்தும் லஞ்சம்-ஊழல் இல்லை என மேடையில் மட்டும் பேசும் அரசு, நடைமுறையில் கோவில் சொத்துகளை அநியாயமாக தாரை வார்க்கிறது” என்றார். பழனியில் 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள கோவில் நிலத்தை தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு குறைந்த வாடகையில் உரிமை வழங்கலாம் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை, “ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டியிருந்தும் திறக்கப்படவில்லை. மேகதாது அணைக்கான அளவீடு பணிகள் தொடங்கியுள்ளன. இது காவிரி டெல்டா பகுதிகளை வறண்டு போகச் செய்யும். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்சனை இல்லாமல் இருந்தது” என்று குறிப்பிட்டார்.

மின்சாரத் துறை அமைச்சர் துறையில் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்றும், 67,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் மின்வெட்டு பிரச்சினை நீடிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். வயர்மேன் பற்றாக்குறை காரணமாக மின்சாரம் தடையின்றி வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. “தேசபற்று மற்றும் மொழிபற்று இரண்டையும் சமமாகப் பார்க்க வேண்டும். இதில் தவறுபவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்” என்று கூறிய அவர், அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும் என்றும் உறுதியளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version