பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாகப் வழக்குப்பதிவு செய்து, அதனை விரைவாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தருவதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமையும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன்,அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மஹேஷ்வர் தயாள், காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹூசைன், காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ராஜேஸ்வரி,காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க்,காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) கே. பவானீஸ்வரி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
