மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரம் Four Points by Sheraton ஓட்டலில் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) முக்கிய அரசியல் இணைப்பு விழா நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.
தனது அறிக்கையில் விஜயபாஸ்கர், “என் பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.க.வில் இணைகிறேன். த.வெ.க.வில் என்னை இணைத்துக் கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த இணைப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெராடன் ஓட்டலில் மாபெரும் இணைப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களான ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் ஏற்கெனவே த.வெ.க.வில் இணைந்துவிட்டனர். இவர்களுடன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் நாளைய விழாவில் த.வெ.க.வில் இணைய உள்ளனர்.
இந்த இணைப்புகள் தவெகவுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் விலகி வரும் நிலையில், ஜோசப் விஜய் தலைமையிலான புதிய கட்சி தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் அனுபவமும், மக்கள் தொடர்பும் த.வெ.க.வின் வளர்ச்சிக்கு உதவும் என்று கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. நாளைய விழா தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
