தற்போதையச் சூழலில் தமிழகத்திற்குப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள அலுவலகத்தில் நீர்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட காவிரியின் நான்கு முக்கிய அணைகளிலும் தற்போதைய நிலவரப்படி நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காவிரி ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தண்ணீரைத் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ மட்டுமே என்று தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு நேரடியாக எந்தப் பங்கும் இல்லை என்றார்.

தற்போதைய நிலவரப்படி காவிரிப் படுகை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்பதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாகவே உள்ளதாக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். தற்போது அணைகளில் உள்ள நீர், அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு கர்நாடக மக்களின் குடிநீர் தேவையைத் பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும், எனவே, இதனைப் பாசனத்திற்காகத் தமிழகத்திற்குத் திறந்து விட இயலாது என்றும் அவர் கூறினார்.

வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், நிலைமை சீராகும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 15-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி ஒழுங்குமுறை குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் மாதத்திற்குரிய 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 32 டி.எம்.சி தண்ணீரைத் தராமல் கர்நாடகா இழுத்தடித்து வரும் வேளையில், கர்நாடகாவின் தொடர் மறுப்பு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version