இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நியூசிலாந்து சென்றடைந்தார்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்து நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தின் இறுதிப் பகுதியாக ஆக்லாந்து சர்வதேச விமான நிலையம் சென்ற அவருக்கு, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் வந்து, நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.

நியூசிலாந்தின் தூதரக மரபுகளின்படி அந்நாட்டிற்கு வரும் பிற நாட்டுத் தலைவர்களை அந்நாட்டுப் பிரதமரே நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமைச்சர்கள் அல்லது உயரதிகாரிகளே வழக்கமாக வரவேற்பார்கள். இருப்பினும், இந்தியாவுடனான உறவுக்குத் தனது அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரடியாக விமான நிலையம் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதற்கு முன்னதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் (2014) மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் (1999) ஆகியோருக்கு மட்டுமே இது போன்ற பிரத்யேக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், நியூசிலாந்திற்கு உங்களை வரவேற்கிறோம் பிரதமர் நரேந்திர மோடி” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்’ குறித்தும், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்தும் இரு நாட்டுப் பிரதமர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ‘ஸ்பார்க் அரேனா’ அரங்கில் நடைபெறவுள்ள ‘கியா ஓரா மோடி’ என்ற பொதுக்கூட்டத்தில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நியூசிலாந்தின் முன்னணி வணிகப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த நட்சத்திரங்களையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version