கரூர் அருகே அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை மாணவர்களுக்கு திரையிட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றை நேரலையாகத் திரையிட்டுக் காட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் கல்வி சாரா மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் திரையிடக் கூடாது என்ற கடுமையான விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்துத் தகவல் அறிந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

“அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்குத் திரையிட்ட சம்பவம் முற்றிலும் தவறானது என்றும் விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, கல்வித் துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் இனி நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version