பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 22 ஆம் தேதி, தவெக தலைவரின் பிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்த கட்சியினர், கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது மாணவர்களை தவெக தலைவருக்கு பிறந்தநாள் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முகத்தின் வடிவில் 3000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்துள்ளனர். குழந்தைகளை பள்ளிகளின் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், பெற்றோர் அனுப்பி வைக்கும் நிலையில், மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் அரசியல், மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி கற்பிக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும், நற்பண்புகளை பயிற்றுவிக்கவும் தான் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
