காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் பற்றாக்குறையாகப் பெய்ததால், காவிரிப் படுகையில் உள்ள அணைகளில் ஹாரங்கி தவிர கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி ஆகியவை நிரம்பாமல் இருந்தன. இதனால் தமிழகத்தின் முக்கிய அணையான மேட்டூரில் நீர்மட்டம் 79 அடிக்கும் கீழே குறைந்தது.

ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கோரியபோதும், வழக்கம் போல கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் சுமார் 4 டி.எம்.சி. நீர் திறக்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் போராட்டங்களை நடத்தினர். சமீபத்தில் குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் கனமழை பெய்ததால் நிலைமை மாறியது. காவிரிப் படுகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி., ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது (பயன்பாட்டு நீர் 67.517 டி.எம்.சி.). விகிதாச்சார அடிப்படையில் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு உரிய பங்கைத் திறப்பதில் கர்நாடகத்துக்கு சிரமம் இல்லை. மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து திடீரென விநாடிக்கு 15,500 கன அடியாக உயர்ந்ததால், அணையின் பாதுகாப்பை முன்னிட்டு விநாடிக்கு 25,000 கன அடி உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது.

இதனால் தமிழகத்திற்கு வரும் நீர் அளவு ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. உபரிநீர் பிலிகுண்டுலுவை அடைந்ததால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் ஆற்றங்கரைப் பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளதால், அங்கு வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version