சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) ஒரு பேருந்தில் இயங்கும் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் எதிர்பாராத வாசகம் தோன்றியதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. வழித்தட எண் மற்றும் செல்லும் இடங்களைக் காட்ட வேண்டிய திரையில் “தக்காளி வெற்றிக் கழகம்” என்ற சொற்றொடர் ஓடியது. விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இயங்கும் அந்தப் பேருந்தில் ஆளும் கட்சியின் பெயரைக் கிண்டல் செய்யும் வகையில் இந்த வாசகம் திரையில் தோன்றியது.

சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. பயணிகள் தங்கள் செல்லும் வழித்தடத்தை எளிதில் அறியும் வகையில் டிஜிட்டல் போர்டுகளில் ரூட் விவரங்கள் தொடர்ந்து காட்டப்படுகின்றன. ஆனால் இந்த முறை அந்தப் பலகை தவறான தகவலைக் காட்டியதால் பயணிகள் இடையே குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வின் வீடியோ விரைவில் பரவியது. பலர் “பேருந்து ரூட் தெரியாமல் சிரமப்படுகிறோம். இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடக்கக்கூடாது” என குறை கூறினர்.இந்தப் பலகையை நடத்துநர்கள் மட்டுமே இயக்க முடியும் என்பதால் “யார் இந்த வாசகத்தை உள்ளிட்டனர்?” என்ற கேள்வி எழுந்தது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் உடனடியாக விளக்கம் அளித்தது. “குறிப்பிட்ட பேருந்தின் வழித்தட விவரப் பலகை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் மாற்றப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. பலகை சரிசெய்யப்பட்டது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளது.

இது முதல் முறையல்ல. சட்டமன்றத் தேர்தல் காலத்திலும் பேருந்துகளின் டிஜிட்டல் பலகைகளில் மர்ம நபர்கள் கட்சிப் பெயர்களை உள்ளிட்டு வைரலாக்கியிருந்தனர். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் திருச்சி மண்டல அரசுப் பேருந்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் தோன்றிய சம்பவம் நடந்தது.

தொடர்ச்சியாக இத்தகைய மாற்றங்கள் நடைபெறுவதால், பணிமனையிலா அல்லது நிறுத்துமிடங்களிலா மாற்றம் செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். அரசுப் போக்குவரத்து அமைப்புகளின் டிஜிட்டல் அமைப்புகளில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version