மிழகத்தின் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். அந்தமான் கடலில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், குமரிக்கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version