தனது மூன்று மகள்களுக்காக தனது வாழ்வையே தியாகம் செய்த தந்தை முதியோர் இல்லத்தில் உயிரிழந்த நிலையில், இறுதிச் சடங்குக்குக் கூட வராமல், வீடியோ காலில் மகள்கள் பார்வையிட்ட சம்பவம், பாசம் என்றால் என்னவென்று கேள்வியை எழுப்பியுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர் சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஜவுளி வியாபாரியான இவர், மனைவி மீனாவுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர் அவரது மனைவி உயிரிழந்தார்.

நீண்டநாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிவ்சரண் குப்தா, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு முதியோர் இல்ல நிர்வாகம், அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது. ஆனால் நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் வசித்து வந்த அவர்கள், நேரில் வர இயலாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கை பார்த்தனர். முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து அவரது இறுதிச்சடங்குகளை நடத்தினர்.

முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில், “சிவ்சரண் குப்தா தனது செல்போன் மூலம் மகள்களுடன் அடிக்கடி பேசுவார். ஆனால் உடல்நிலை மோசமான பிறகு அவர்களிடமிருந்து அழைப்புகள் குறைந்துவிட்டன. சுமார் 20 நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தோம். இருப்பினும் அவர்கள் வந்து பார்க்கவில்லை” என்றார்.

நேபாளத்தில் ஆசிரியையாக பணிபுரியும் மூத்த மகள் அனிதா, ஆன்லைன் மூலம் ரூ.5,100 அனுப்பி, தனது தந்தையின் இறுதிச்சடங்கை முறையாக நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இறுதிச்சடங்கு முடிந்த பிறகு, அதன் வீடியோ பதிவையும் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் கேட்டுள்ளனர். மேலும், வீடியோ கால் உரையாடலின்போது, “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் சாப்பிடவும், குளிக்கவும் வேண்டும்” என்று ஒரு மகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவ்சரண் குப்தா தனது மூன்று மகள்களுக்கும் நல்ல கல்வி அளிப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்ததாக முதியோர் இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

முதலில் தந்தையின் அஸ்தியை பாதுகாத்து வைக்குமாறு கூறிய மகள்கள், பின்னர் தங்களால் சோனிபட்டுக்கு வர முடியாது என்றும், அஸ்தியை கங்கை நதியில் கரைத்து விடுமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

சிவ்சரண் குப்தாவின் மறைவுக்குப் பிறகு, அவரது விருப்பத்தின்படி குடும்பத்தினர் ஒப்புதலுடன் கண் தானமும் செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது கண்கள், பார்வையிழந்தோருக்கு ஒளி தரும் வகையில் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த சம்பவம், முதியோர் பராமரிப்பு, குடும்ப உறவுகள் மற்றும் வயதான பெற்றோரின் தனிமை குறித்து நாடு முழுவதும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version