உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாக உள்ளநிலையில், திரைப்படத்தை முதலமைச்சர் விஜய் பார்த்து ரசித்தார்.
சென்னை அடையாறில் உள்ள புகழ்பெற்ற எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திற்கு (தாகூர் திரைப்படக் கல்லூரி) நேரில் சென்று, அங்கு திரையிடப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை மற்றும் முழுமையான அரசியல் பணி காரணமாக விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் விவகாரம் காரணமாக திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். விஜய் அரசியலில் முழுமையாகக் களம் இறங்கி முதல்வரான பிறகு திரைக்கு வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களிலும் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாக உள்ளநிலையில், சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்படக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரத்யேக திரையரங்கில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் முதலமைச்சருக்காகத் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
