தென்காசி அருகே குழந்தையை சாக்குப்பையில் கட்டி கொடூரமாக துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய ஊழியரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கலைச்செல்வி என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அங்கு வந்த ஒரு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, குழந்தையை மிரட்டும் நோக்கில், ஒரு சாக்குப்பையினுள் போட்டு அதன் வாயை இறுக்கமாகக் கட்டியுள்ளார்.
பைக்குள் இருந்த குழந்தை மூச்சுவிட முடியாமலும், பயத்தினாலும் அலறித் துடித்து அழுதுள்ளது. ஆனால், அதைக் கண்டும் இரக்கமின்றி கலைச்செல்வி குழந்தையை மிரட்டியுள்ளார்.
இந்தக் கொடூரமான செயலை அங்கிருந்த யாரோ ஒருவர் தங்களது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிஞ்சுக் குழந்தையிடம் இப்படியா மிருகத்தனமாக நடந்துகொள்வது எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உத்தரவின் பேரில், அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாவூர்சத்திரம் காவல்துறையினர் கலைச்செல்வி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
