மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் 34 ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு இரவு நேரங்களில் ஈடுபடுவதால், மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டது. மலர்விழி என்ற மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூரு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கோபிநாத்தை பெங்களூரு அழைத்து சென்று 34 ஹார்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோபிநாத்திடம் இருந்து ஹார்ட் டிஸ்குகள வாங்கிய நபரையும் சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
