நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, அமைப்பாளர்களுக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவலை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பாளர் அபிஜித் திப்கே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 37 நாள் போராட்டம் மற்றும் சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நிறைவு உரையில் சோனம் வாங்சுக்கின் பெயர் இடம்பெறாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அமைப்பிற்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள சிஜேபி அமைப்பாளர் அபிஜித் திப்கே, “சோனம் வாங்சுக் ஐயாவின் தியாகத்தையும் பங்களிப்பையும் யாராலும் மறக்க முடியாது. அவர் தனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டின் சாட்சியத்தை விழித்தெழச் செய்தார். ஒரு தனிநபரை மட்டும் ‘நாயகனாக’ சித்தரிப்பதைத் தவிர்க்கவே எனது உரையில் பொதுவான ஜனநாயக வலிமையைக் குறிப்பிட்டேனே தவிர, எங்கள் இருவருக்கும் இடையே எந்தப் பிளவும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, சோனம் வாங்சுக்கின் சத்தியாகிரகப் போராட்டம் இந்த இயக்கத்திற்குப் பெரும் வலிமை சேர்த்தது என்றும், அவரது அர்ப்பணிப்பிற்கு நாடு முழுவதும் என்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் சிஜேபி (CJP) அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
