NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் பின்வாங்காமல் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்ட மைதானத்துக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இத்தகைய முக்கியமான போராட்டச் சூழலில் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் விஜேதா தாஹியா தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று போராட்டக்காரர்கள் மீது தடியடி நடைபெற்ற அதே நேரத்தில், அவர் டெல்லியில் உள்ள ஒரு பிரபல துரித உணவகத்தில் பர்கர் சாப்பிடும் காட்சிகள் பதிவாகி பரவின. இது பலரது கவனத்தை ஈர்த்தது.

இதுகுறித்து விஜேதா தாஹியாவிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, “நான் ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஊர்வலம் முடிந்த பிறகு அங்கிருந்து சென்றேன். பசியாக இருந்ததால் பர்கர் சாப்பிட்டேன். ஒருவருக்கு பசித்தால் உணவு உட்கொள்வது இயல்பானது. இதை பெரிய விஷயமாக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விளக்கம் சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து விஜேதா தாஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவி உட்பட அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளது. கட்சி வெளியிட்ட அறிக்கையில், “அமைதியான முறையில் போராடிய எங்கள் தோழர்கள் காவல்துறையின் கொடூரத் தாக்குதலை எதிர்கொண்ட வேளையில், செய்தித் தொடர்பாளர் விஜேதா தாஹியாவின் உணர்வற்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானது மற்றும் அவரது முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது” என்று வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தச் சம்பவம் போராட்டக் குழுவுக்குள் சிறு பிளவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுதியாகத் தெரிவித்துள்ளது. NEET விவகாரம் தொடர்பான மாணவர்களின் கொந்தளிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version