நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சியினர்டெல்லியில் நடத்தி வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களமிறங்கி உள்ளதால் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாணவர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் காங்கிரஸ் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
- உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.
- தேர்வு முறைகேடு மற்றும் மாணவர் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும்.
- மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மத்திய அரசு நேரடியாக கேட்க வேண்டும்.
- போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை சந்தித்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் காங்கிரஸ் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து ராகுல் காந்தியை சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் போலீசாரும் போராட்டக்காரர்களும் காயமடைந்த நிலையில், வன்முறை தொடர்பாக பல எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாணவர் போராட்டம் பாஜகவுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
