செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில், மாவட்டத்தின் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு பின்னர் கைகலப்பாக மாறியதில், ஜோ மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு இல்லத்தின் காப்பாளர்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த மோதலின் போது பாதுகாப்பு இல்லத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அரசு சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு சொத்துகளை சேதப்படுத்தியதுடன், கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு இல்ல வளாகத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version