அரசு பள்ளியில் முதல்வரின் புகைப்படத்தை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்கள் வகுப்பறைக்குள் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படத்தை சுவரில் மாட்டி, மாணவர்களிடம் “இவர் யாரென்று தெரிகிறதா? இவர் தான் உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்” என்று அறிமுகப்படுத்தியதுடன், பாடம் எடுப்பது போன்ற காட்சிகளை ரீல்ஸ் வடிவில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களின் படிப்பு சூழலை பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், we the leaders இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்தவிதமான நெறிமுறையும் இல்லாமல், அதிகாரப் போக்குடன் செயல்படுவது வாடிக்கையாகி வருகிறது” என்று அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுப் பள்ளிகள் தரமிழந்து, உரிய கட்டிட வசதிகள் கூட இல்லாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன் பெரும் சவால் இருப்பதாகவும் குறிப்பிட்டார். “அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் முனைப்பில் இருக்க வேண்டிய நேரத்தில், ஆளும் கட்சியினர் வகுப்பறைகளுக்குள் நுழைந்து புகைப்படம் மாட்டி ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்கள் பள்ளிகளின் அவல நிலையை மேலும் அதிகரிக்கின்றன” என்று அவர் விமர்சித்தார்.
மேலும், “ஆளுங்கட்சியினர் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதலமைச்சர் விஜய் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்” என்று முதலமைச்சர் விஜய் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், இதுதான்
நீங்க சொன்ன அந்த மாற்றமா விஜய் சார்! நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்… என்று பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அரசு பள்ளிகளை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது கல்வி அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பை அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து வருகின்றன.
