இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் 2026-இல் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்லோவில் நடைபெற்ற இந்த 14-வது பதிப்பில், 20 வயதான சென்னை இளைஞர் முதல் இந்திய வீரராக இந்த புகழ்பெற்ற பட்டத்தை வென்று இந்திய செஸ் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிவானார். உலக சாம்பியன் டி. குகேஷ், உலக நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சன், அலிரேசா பிரோஸ்ஜா, வெஸ்லி சோ, வின்சென்ட் கீமர் உள்ளிட்ட உலகின் சிறந்த வீரர்கள் பங்கேற்ற கடும் போட்டியில் பிரக்ஞானந்தா தனது அசாத்திய திறமையை நிரூபித்தார்.

இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பட்டத்தை உறுதி செய்த அவர், மொத்தம் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தைப் பிடித்த வெஸ்லி சோவை ஒரு புள்ளி வித்தியாசத்தில் முந்தினார். தொடரின் நடுப்பகுதியில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சற்று பின்னடைவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, ‘கம்பேக் கிங்’ என அழைக்கப்படும் வகையில் அதிர்ச்சி மீட்பை நிகழ்த்தினார். கடைசி நான்கு கிளாசிக்கல் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக, அலிரேசா பிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் ஆகியோருக்கு எதிரான வெற்றிகள் அவரது பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தன.

9-வது சுற்றில் குகேஷை தோற்கடித்தது அவருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. இந்த தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆட்டங்களில் இருமுறை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா வரலாறு படைத்தார். 2026-ல் கார்ல்சனை ஒரே தொடரில் கிளாசிக்கல் முறையில் இரு முறை தோற்கடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு உரியது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பும் அவரைச் சேரும்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய இந்த சாதனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அவருக்கு புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி இந்திய செஸ் அரங்கில் இளம் தலைமுறையினருக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. உலக அளவில் உயர்ந்து வரும் இந்திய செஸ் வீரர்களின் வரிசையில் அவர் மற்றொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளார். இந்த சாதனை இந்தியாவின் செஸ் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version