மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்தார். “முதல்வர் கட்டாயம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சிலர் தங்களது அரசியல் இருப்பை வெளிக்காட்ட தினசரி செய்தியாளர்களை சந்தித்திருக்கலாம். ஆனால், எங்கள் முதல்வர் தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கவனித்து வருகிறார். மக்களுக்குத் தேவையான தகவல்களை உரிய நேரத்தில் தெளிவுபடுத்தி வருகிறோம். செய்தியாளர்களை சந்திப்பதுதான் அரசியலின் அடையாளம் அல்ல” என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். கடந்த ஆண்டுகளாக இருந்த நிலை தொடர வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மத உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படாது” என்றார்.

மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் காணாமல் போன விவகாரம் குறித்து காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவுகள் வெளிவந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மேலும், யார் வேண்டுமானாலும் புதிய அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version