கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அரங்கேறிய கார் குண்டுவெடிப்பு வழக்கில், நிதி திரட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை 15 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இச்சம்பவத்திற்கு நிதி வசூல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பெரோஸ், நவாஸ், அப்பாஸ், யூசுப் ஆகியோரது வீடுகளிலும், இவர்களுக்குக் கேரள சிறையில் இருந்து கொண்டு சதித்திட்டங்களுக்கு வழிகாட்டியதாகக் கூறப்படும் அசாருதீனின் இல்லத்திலும் இன்று காலை முதல் அதிரடிச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசாருதீன் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், ஐந்து தனித்தனி குழுக்களாகப் பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்காக சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டதா மற்றும் ஹவாலா பரிமாற்றங்கள் ஏதேனும் நடைபெற்றதா என்ற கோணத்தில் இந்தச் சோதனையும் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version