கோவையில் ஒரு பெண் காரில் கடத்தப்படுவது போன்று வெளியான வீடியோவால் அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், இருகூர், தீபம் நகர் பகுதியில் நேற்று (நவ.06) மாலை சுமார் 6.45 மணியளவில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை ஒரு மர்ம கும்பல் பயங்கரமாக தாக்கி வெள்ளை நிற காரில் கடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பெண் கத்திக்கதறி கூச்சலிடும் ஆடியோவுடன் கூடிய CCTV காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மற்றொரு பெண் இதை நேரில் பார்த்ததாகவும், அவர் உள்பட அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். அதில் முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து கடத்தப்பட்ட வெள்ளை நிற கார் பற்றிய தகவலை அறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர், “சிங்காநல்லூர் போலீசார் சூலூர் முதல் ஏ.ஜி புதூர் வரை உள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் கார் விபரம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டதில் A.G.புதூரில் ஒரு பேக்கரி கடையில் இருந்த CCTV கேமராவில் குறிப்பிட்ட அந்த வெள்ளை நிற கார் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த வெள்ளை நிற காரின் பதிவு எண் சரியாக பதிவாகவில்லை. இருப்பினும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் அந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் இதுவரை பெண் கடத்தல் சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் போலீசாருக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஓர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட விவகாரத்தின் நடுக்கமே இன்னும் குறையாத நிலையில், மற்றொரு இளம்பெண் காரில் கடத்தப்பட்டிருப்பது கோவை பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
