2026 டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்த முடிவு இலங்கை அணியின் தொடர் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு மட்டுமின்றி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல வேடிக்கையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எப்படி சிக்கல்? குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், நியூசிலாந்து அணியை இலங்கை வீழ்த்த வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், இந்த முக்கியப் போட்டியில் நியூசிலாந்து அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு மங்கத் தொடங்கியுள்ளது.
திடீர் திருப்பம்: போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இலங்கை வெற்றி பெற்றுவிடும், அதன்மூலம் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் உருவாகும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், நியூசிலாந்து அணி சரிவிலிருந்து அபாரமாக மீண்டு வந்து 168 ரன்களைக் குவித்ததுடன், இறுதியில் வெற்றியையும் தன்வசப்படுத்தியது.
இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்: பாகிஸ்தான் அணியின் இந்த நிலைமையைக் கிண்டல் செய்து இணையத்தில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், “நான் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டால் அவர்கள் தோற்கிறார்கள்; சரி வேறு அணிக்காக (இலங்கை) வேண்டிக்கொண்டால் அவர்கள் அதைவிட மோசமாகத் தோற்கிறார்கள்” என வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். மறுபுறம் இந்திய ரசிகர்களும் இலங்கை அணியின் மோசமான பேட்டிங்கை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தானின் அரையிறுதிப் பயணம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. அந்த அணி தனது கடைசிப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதுடன், சிறந்த நெட் ரன் ரேட்டைப் பெற வேண்டும். மேலும், குரூப்-2 இல் உள்ள மற்ற அணிகளின் போட்டி முடிவுகளுக்காகவும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
