திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கோபி காலனி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கிராப்பட்டியில் உள்ள தனியார் மேநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜூன் 10ஆம் தேதி காலை மாணவி பள்ளிக்கு வழக்கம்போல புறப்பட்டுச் சென்ற நிலையில் அவர், பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், கண்ட்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சில மணி நேரம் கழித்து எடமாலைப்பட்டி புதூர் அடுத்துள்ள செட்டிப்பட்டி பாலம் அருகில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்குச் சென்ற பெற்றோர் அவளை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள நாகமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் தினமும் செல்போன் மூலம் பேசிப் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற மாணவியை, எடமலைப்பட்டிபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பூபதி, விராலிமலை அடுத்துள்ள மாதிரிபட்டி என்ற ஊரில் முள் காட்டிற்கு கூட்டிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவியின் இந்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் பூபதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பூபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் இரண்டு வயது ஆண் பிள்ளை, மற்றும் இரண்டு மாத ஆண் குழந்தை என இரண்டு பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

