ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 79 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் வல்லூரி அஜய் பாபு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஜய் பாபு மொத்தமாக 330 கிலோ (ஸ்னாட்ச் முறையில் 149 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 181 கிலோ) எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையையும் அவர் படைத்தார்.
போட்டியின் முடிவில் மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது 331 கிலோ எடையைத் தூக்கி (புதிய காமன்வெல்த் சாதனை) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அஜய் பாபு வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே 325 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அஜய் பாபுவின் தந்தை வல்லூரி சீனிவாச ராவ், 2010 டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே மகனும் சர்வதேச மேடையில் பதக்கம் வென்று குடும்பப் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.
நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியா வெல்லும் 6-வது பதக்கம் இதுவாகும்.
