2014 மக்களவைத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளித்ததன் வழியாக இன்று தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் சென்றது குறித்து திமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மே 23ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டதாகவும் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் கடுமை காட்டியிருந்தார்.

உதயநிதியின் கூற்றுக்கு திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எங்களை விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாக விமர்சியுங்கள், ஆனால் எங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை விமர்சிக்காதீர்கள். எங்களைக் குறை கூற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உண்டு, அதற்காக நாங்கள் ஒருபோதும் ஆத்திரப்பட மாட்டோம். ஆனால், தமிழக மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்கவோ அல்லது அவமதிக்கவோ கூடாது.

தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள்; அவர்கள் மிகுந்த விவேகத்தோடும் தெளிவோடும் வாக்களிக்கக் கூடியவர்கள்.

எங்கள் தலைவர்கள் மீதோ அல்லது எங்கள் கட்சியின் மீதோ வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் திட்டமிட்டே பதிலளிக்காமல் இருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால், ஒரு தசாப்த காலமாக (10 ஆண்டுகள்) முக்கிய அமைச்சரவைகளைப் பெற்று, அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் செய்த மிகப்பெரிய துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை.

தமிழக வரலாற்றில் எந்தவொரு கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், எங்களுக்குத் தனித்து வெல்வதற்கான பல வாய்ப்புகள் இருந்தபோதும் நாங்கள் கூட்டணியில் இணைந்தோம்.

மக்களின் தீர்ப்பை பணிவோடும் பெருந்தன்மையோடும் மதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு கிரிஷ் சோடங்கள் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version