தமிழ்நாடு சிறைச்சாலைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து பட்ஜெட்டுக்கு முன்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு  மேற்கொண்டார்.

சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் கைதிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பேட்டரி வாகனம் மூலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறைகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பின்னர் சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;-

தமிழ்நாட்டில் 13 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் உள்ள கைதிகளின் கொள்ளளவு, தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போதைய சூழலுக்கு ஏற்ப சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன வசதிகள், பாதுகாப்பு மேம்பாடு குறித்து பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆய்வு செய்யப்படும்.

புழல் சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக நாள்தோறும் வந்து செல்லும் 700 பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பார்வையாளர்கள் மூலம் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் விநியோகம் செய்வதை தடுத்திட கூடுதலாக பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும்.

சிறைக்குள் கைதிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

புழல் சிறையில் கடந்த 6 மாதங்களில் 5 கைதிகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர். சிறையில் 2 ஆம்புலன்ஸ் தொடர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிறை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேவையில்லாமல் வீண் பணியிட மாற்றங்கள் செய்ய வேண்டாம் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

மின்வாரியத்திலும் இதேபோன்று வீண் பணியிட மாற்றங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியில் ஏற்பட்ட தவறுகளுக்கு தண்டனையாக கொடுக்கப்படும் பணியிட மாறுதலும் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளேன்.

அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை என்பது அங்குள்ள ஜெனரேட்டர் கோளாறு மற்றும் கேபிள் எரிந்ததால் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்தடையை காட்டிலும் தற்போது குறைந்து உள்ளது.

இரவு நேரத்தில் மின்வாரிய  ஊழியர்கள் பணியில் இருப்பதில்லை எனவும் மது போதையில் இருப்பதாகவும் வரும் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்தடைக்கு தனிப்பட்ட நோக்கத்தோடு செயல்பட்ட சில நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் முடிவுற்ற நிலையில் உள்ள நீதிமன்ற கட்டிடங்கள் விரைவாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தேவைப்படும் இடங்களில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் விரைவாக நீதி கிடைத்திட வேண்டும் என்பதற்காக நீதித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version