வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு, நன்கொடை திருட்டைத் தொடர்ந்து தற்போது கைரேகை  திருட்டிலும் பிரதமர் மோடி ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பியுமான  ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

அவரது சமூக வலைத்தளப் பதிவில், வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு, நன்கொடை திருட்டு… இப்போது ‘கைரேகை திருட்டு’! மோடி ஆட்சியில் எந்த வகையான திருட்டும், கொள்ளையும் சாத்தியமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள கிரோலி (Ghirouli) நிலக்கரி சுரங்கப் பகுதியில், அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்துக்காக சுரங்கத் தோண்டலுக்கு வழிவகுக்கும் வகையில், இறந்தவர்களின் கைரேகைகளை பயன்படுத்தி போலி கிராம சபை ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக பறிக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இன்று, காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிங்ரௌலி ஃபைல்ஸ்’ (Singrauli Files) குறித்த செய்தியாளர் சந்திப்பில், கே. ராஜு மற்றும் டாக்டர் விக்ராந்த் பூரியா இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்க திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் அங்கீராமற்ற செயல்முறைகளில் போலி கைரேகைகள் பயன்படுத்தப்பட்டதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத அல்லது வெளியூர்களில் பணிபுரியும் மக்களின் கைரேகைகளைப் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் உள்ளன.

நில உரிமையாளர்களின் பெயரில் போலியான ‘விற்பனை ஒப்பந்தங்கள்’ (Sale Deeds) அல்லது ‘ஒப்புதல் கடிதங்கள்’ உருவாக்கப்பட்டு, அவற்றில் போலி கைரேகைகள் பதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version