முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தூத்துக்குடி மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய பின்னர், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஆகஸ்ட் 4-ம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரைப் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version