தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, அவர் தரப்பில் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மார்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் முறையிட்டார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version