நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘கரப்பான் பூச்சி ஜனதா’ அமைப்பு நடத்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், கடந்த 19 நாட்களாக உணவு மற்றும் நீர் உட்கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.

59 வயதான வாங்சுக் ஏற்கெனவே 8.5 கிலோ உடல் எடையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது உயிரைப் பாதுகாக்க அவசர மருத்துவ உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராகேஷ் குமார் சைனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவில், “அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டம் நடத்தும் உரிமை உண்டு. ஆனால், தேசிய-சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த உண்ணாவிரதத்தின்போது வாங்சுக் உயிரிழந்தால் அது நாட்டுக்கே பெரும் அவமானமாக அமையும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அடுத்த 48 மணி நேரத்துக்குள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து கட்டாய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. “எந்த ஒரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது” எனக் கூறிய நீதிபதிகள், சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து மருத்துவ நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், அரசு மருத்துவர்கள் தினசரி அவரைப் பரிசோதிக்க வேண்டும், அவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தினசரி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மாறி மாறி பரிசோதனை செய்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் சோனம் வாங்சுக் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “பல நாட்களாக சாப்பிடாமல் இருந்தால் உடல் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. உடல் பலவீனமடைந்துள்ளது, தசைகள் சோர்வடைந்துள்ளன. ஆனால் மன உறுதி குறையவில்லை” என்று தெரிவித்தார். பல அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரியும், அரசிடமிருந்து உரிய பதில் வராததால் போராட்டத்தை நிறுத்த முடியாது என அவர் உறுதியாகக் கூறினார்.

மேலும், ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version