ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஈரானின் கார்க் (Kharg) தீவை நோக்கிச் சென்ற காலி எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, எச்சரிக்கைகளை மீறி பயணித்த எண்ணெய் கப்பலை செயலிழக்கச் செய்வதற்காக ஹெல்ஃபயர் (Hellfire) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனுடன், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களும் குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரான், அஹ்வாஸ், பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), “மத்திய கிழக்கிலிருந்து எரிசக்தி ஏற்றுமதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் கிடைக்காது” என்று எச்சரித்துள்ளது.
இந்த பதற்றத்தின் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது மோதலுக்கு முந்தைய நிலையை விட 15 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் விரைவில் தோற்கடிக்கப்படும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் அணு திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், அணு விவகாரம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே முன்பு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிபந்தனைகள் நடைமுறையில் அமல்படுத்தப்படாவிட்டால், அதனை பின்பற்ற எந்த காரணமும் இல்லை என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகம்மது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
